கண்ணம்மா — என் காதலி
நாணிக் கண் புதைத்தல்
மன்னர் குலத்தினிடைப் பிறந்தவளை — இவன்
மருவ நிகழ்ந்ததென்று நாணமுற்றதோ?
சின்னஞ் சிறுகுழந்தை யென்றகருத்தோ — இங்கு
செய்யத் தகாதசெய்கை செய்தவருண்டோ?
வன்ன முகத்திரையைக் களைந்திடென்றேன் — நின்றன்
மதங்கண்டு துகிலினை வலிதுரிந்தேன்.
என்ன கருத்திலடி கண்புதைக்கிறாய்? — எனக்
கெண்ணப் படுவதில்லை யேடிகண்ணம்மா!
கன்னி வயதிலுனைக் கண்டதில்லையோ? — கன்னங்
கன்றிச் சிவக்கமுத்த மிட்டதில்லையோ?
அன்னியமாக நம்முள் எண்ணுவதில்லை, — இரண்¢
டாவியுமொன் றாகுமெனக் கொண்டதில்லையோ?
பன்னிப் பலவுரைகள் சொல்லுவதென்னே? — துகில்
பறித்தவன் கைபறிக்கப் பயங்கொள்வனோ?
என்னைப் புறமெனவுங் கருதுவதோ? கண்கள்
இரண்டினில் ஒன்றையொன்று கண்டுவெள்குமோ?
நாட்டினிற் பெண்களுக்கு நாயகா¢சொல்லும் — சுவை
நைந்த பழங்கதைகள் நானுரைப்பதோ?
பாட்டுஞ் சுதியுமொன்று கலந்திடுங்கால் — தம்முள்
பன்னி உபசரணை பேசுவதுண்டோ?
நீட்டுங் கதிர்களொடு நிலவுவந்தே — விண்ணை
நின்று புகழ்ந்துவிட்டுப் பின்மருவுமோ?
மூட்டும் விறகினையச் சோதிகவ்வுங்கால் — அவை
முன்னுப சாரவகை மொழிந்திடுமோ?
சாத்திரக் காரரிடம் கேட்டுவந்திட்டேன்; — அவா¢
சாத்திரஞ் சொல்லியதை நினக்குரைப்பேன்;
நேற்று முன்னாளில்வந்த உறவன்றடீ; — மிக
நெடும்பண்டைக் காலமுதல் நோ¢ந்துவந்ததாம்.
போற்றுமி ராமனென முன்புதித்தனை, — அங்கு
பொன்மிதிலைக் கரசன் பூமடந்தைநான்;
ஊற்றமு தென்னவொரு வேய்ங்குழல் கொண்டோன் கண்ணன்
உருவம் நினக்கமையப் பார்த்தன் அங்குநான்;
முன்னை மிகப்பழமை இரணியனாம் — எந்தை
மூர்க்கந் தவிர்க்கவந்த நரசிங்கன் நீ,
பின்னையொர் புத்தனென நான்வளர்ந்திட்டேன் — ஒளிப்
பெண்மை அசோதரையென் றுன்னையெய்தினேன்.
சொன்னவர் சாத்திரத்தில் மிகவல்லர்காண்; — அவர்
சொல்லிற் பழுதிருக்கக் காரணமில்லை;
இன்னுங் கடைசிவரை ஒட்டிருக்குமாம்; — இதில்
எதுக்கு நாணமுற்றுக் கண்புதைப்பதே?






