கண்ணம்மா — என் காதலி
குறிப்பிடம் தவறியது
தீர்த்தக் கரையினிலே — தெற்கு மூலையில்
செண்பகத் தோட்டத்திலே,
பார்த்திருந் தால்வருவேன் — வெண்ணிலாவிலே
பாங்கியோ டென்றுசொன்னாய்.
வார்த்தை தவறிவிட்டாய் — அடி கண்ணம்மா!
மார்பு துடிக்குதடீ!
பார்த்த விடத்திலெல்லாம் — உன்னைப் போலவே
பாவை தெரியுதடீ!
மேனி கொதிக்குதடீ — தலை சுற்றியே
வேதனை செய்குதடீ!
வானி லிடத்தையெல்லாம் — இந்த வெண்ணிலா
வந்து தழுவுதுபா ர்.
மோனத் திருக்குதடீ — இந்த வையகம்
மூழ்கித் துயிலினிலே
நானொருவன் மட்டிலும் — பிரிவென்பதோர்
நரகத் துழலுவதோ?
கடுமை யுடையதடீ — எந்த நேரமும்
காவலுன் மாளிகையில்;
அடிமை புகுந்தபின்னும் — எண்ணும்போதுநான்
அங்கு வருவதற்கில்லை;
கொடுமை பொறுக்கவில்லை — கட்டுங் காவலும்
கூடிக் கிடக்குதங்கே;
நடுமை யரசியவள் — எதற்காகவோ
நாணிக் குலைந்திடுவாள்.
கூடிப் பிரியாமலே — ஓரிராவெலாம்
கொஞ்சிக் குலவியங்கே
ஆடி விளையாடியே, — உன்றன்மேனியை
ஆயிரங் கோடிமுறை
நாடித் தழுவிமனக் — குறைதீர்ந்துநான்
நல்ல களியெய்தியே
பாடிப் பரவசமாய் — நிற்கவேதவம்
பண்ணிய தில்லையடி!






